திருமண தகுதிகள்
"திருமண அழைப்பிதழில் உன் பெயருக்கு பின்னால் போடவேண்டிய பட்டப்படிப்புகளைசரியாக எழுதிக்கொடு", என அப்பா கேட்டதாக முகத்தில் அவசரத்தை காட்டிக்கொண்டு வந்தாய் எனதருகே.
"ஒரேயொரு பட்டபடிப்புதான் போடவேண்டும்
அதுவும்கூட முடிவடையாததால்மேற்கோடிட வேண்டுமே" என்றேன் ஆசுவாசமாக
அது என்ன படிப்பு என உன்
கயல்விழிகளின் புருவங்கள் கேள்விக்குறிகளாக
வடிவமெடுத்தன.
அதனை எனது நகைப்பால் ஊடுருவி
" மேற்கோடிட்ட இளநிலை அன்பியல்
மட்டும் போட்டால் போதும்" என்றேன்
செல்லகோபம் தூவிய புன்னகையில்,
"அப்படியானால் நமது பெற்றோர்
பெயருக்கு பின்னால் மேற்கோடிட்ட
முதுநிலை அன்பியல் பட்டம்
போட்டுவிடசொல்லிவிடுகிறேன் ,
எதற்கு வீண்வேலை"
என்றாய் ,பலநாள் பழகிய முகத்தில்
புதுபெண்ணின் வெட்ககீற்றுடன்...
கருத்துகள்
கருத்துரையிடுக