பொன்னியின் செல்வன் படத்தின் வாளும் மாமல்லபுரமும்
பொன்னியின் செல்வன் படத்தின் வாளும் மாமல்லபுரமும்
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் முன்னோட்டம் நேற்று வெளியானது முதல் பாகம் வெளியான போதும் நம் மனதில் நின்றது அதில் குத்திட்டு காட்டப்பட்ட வாள். அந்த வாள் இந்திய மன்னர்கள் பயன்படுத்தும் வளைந்த வாள் போன்று இல்லாமல் ஆங்கில சரித்திர படங்களில் காட்டப்படும் வாள் போன்று இருக்கும்.
ஆனால் அந்த வாளுக்கும் தமிழ்நாட்டிற்கும் நீண்ட பெரும் தொடர்பு உள்ளது. அந்த வாளின் பெயர் பாம்பே கிளாடியஸ்.
இது இருபுறமும் கூர்முனை கொண்ட நேராகவும் சிறிய கைப்பிடியும் கொண்ட வாள். இதனை போர்க்களத்தில் வெட்டி வீசக்கூடிய வகையில் பயன்படுத்தப்படுகிறது. குதிரையில் அமர்த்து வீசுவதற்கு ஏதுவாக இதன் நீளம் அதிகரிக்கப்பட்டு காணப்படும். இந்த வாள் முதலில் ரோம சாம்ராஜ்யத்தின் பாம்பே நகரில் வடிவமைக்கப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால் இதற்கு பாம்பே கிளாடியஸ் என்று பெயர் வந்தது.
சரி இதற்கும் மாமல்லபுரத்திற்கும் என்ன தொடர்பு?
நான் இதை எதேச்சையாகவே கண்டேன். மாமல்லபுரத்தின் பல சிற்பங்களில் இந்த வாள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதுவும் தெய்வங்களுக்கு மட்டுமில்லாமல் அசுர சிற்பங்களுக்கும் இந்த வாள் கொடுக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில்
நான் முதலாவதாக பார்த்த வராக மண்டபத்தில் வலது பக்கம் காணப்படும் விஷ்ணு சிலையின் வலது கையில் மிக நீண்ட பாம்பை கிளாடியஸ் வாள் உள்ளது.
இரண்டாவதாக மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் மகிஷாசுரமர்த்தினி சிற்ப தொகுதியில் காணப்படுகிறது. அதுவும் ஒரு வாள் அல்ல மூன்று வாள்கள் உள்ளன.
முதல் வாள் துர்க்கையின் கைகளில் வெளிப்படையாகவே தெரிகிறது அது சிங்கத்தின் மீது அமர்ந்த துர்க்கையின் கையில் மகிஷனை குத்துவதற்கு தயாராக உள்ளது.
இரண்டாம் வாள் ஆச்சரியப்படும் வகையில் மகிஷனுடன் போரிட வந்த அரக்கனின் கையில் உள்ளது. அந்த அரக்கன் மகிஷாசுரனுக்கு அடுத்தார் போல் உள்ளான். மகிஷாசுரன் பின் வாங்குவதைக் கண்டு பயந்து ஓட தயாராக இருப்பதைப் போல் கேடயத்தையும் வாளையும் பிடித்துக் கொண்டு நிற்கிறான்.
மூன்றாவது வாள் சுவாரசியமான இடத்தில் மறைந்து உள்ளது. நாம் மேலோட்டாகமாக பார்த்தால் மகிஷாசுரன் தன் இருக்கைகளால் பிடித்திருக்கும் கதாயுதம் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். ஆனால் அவன் யுத்த களத்திற்கு இன்னொரு ஆயுதத்தையும் கொண்டு வந்துள்ளான். அதாவது அவன் இடையில் உள்ள அந்த பாம்பே கிளாடியஸ் வாள். அது அவன் சிற்பத்திற்கு பின்னால் உள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. அதனால் அதன் கைப்பிடியும் வாளின் மறுப்பகுதியும் தெரியுமாறு செதுக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுத் தொடர்பு
மாமல்லபுரம் அந்த காலத்தில் சிற்ப நகரமாக மட்டுமல்லாமல் பன்னாட்டு துறைமுக நகரமாக இருந்ததை நிலைநிறுத்த சிற்பி நினைத்திருக்கலாம். அதனால், இந்திய தொன்மை புராணங்களுடன் பல நாடுகளில் உயர்ந்த கலை படத்தில் படைப்புகளை இணைத்திருக்கலாம். இதற்கு சிறந்த உதாரணமாக கிருஷ்ண மண்டபத்தில் உள்ள கோவர்த்தனகிரி சிற்பத் தொகுதியில் பக்கவாட்டில் உள்ள சிங்க உருவங்களின் சிலைகள். அவை எகிப்து, ரோம், கிரேக்கம், போன்ற நாடுகளின் சிங்க உருவங்களை சார்ந்து பிரதிபலிக்கிறது. எனவே பாம்பே கிளாடியஸ் வாள் தமிழ்நாட்டுக்கும் ரோமசாம்ராஜ்யத்திற்கும் உள்ள பழங்கால வணிகத் தொடர்பை வெளிக்காட்டும் விதமாக இந்த சிற்ப தொகுதியில் இடம் பெற்றுள்ளது.
ஆனால், மாமல்லபுர சிற்பங்கள் பல்லவ காலத்தைச் சார்ந்தவை. அதாவது பொ.ஆ.பின் ஆறு முதல் பத்தாம் நூற்றாண்டு. ஆனால், அதற்கு முன்பே இந்த வாள் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் மண்தாழிகளில் கிடைத்துள்ளது. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வரலாற்று சாட்சியாக வைத்துள்ளனர். இதன் காலம் பொ.ஆ.முன் ஆறாம் நூற்றாண்டு. இது தமிழ்நாட்டின் இரும்பு காலத்தினை சேர்ந்தது.இது சங்ககாலம் தொட்டு ரோமசாம்ராஜ்ஜியத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்கிறது.






கருத்துகள்
கருத்துரையிடுக