முத்தம்மாள் புராணம்

 முத்தம்மாள் புராணம்

எத்தனையோ அழகிகள் வாழ்வைவிட
சில கிழவிகள் வாழ்வு அழகியல் தன்மை
நிறைந்திருக்கும்.
அதற்கான நல்ல உதாரணம் எனது
ஊர் முத்தம்மாள்.


பிறக்க ஒருஊர், பிழைக்க ஒருஊர் என்ற
சொலவடை மரபைமீறி வாழ்வதற்கென
ஒரு ஊர் கண்டு வந்து சேர்ந்தாள்
எங்கள் ஊருக்கு.
செல்வக் குடும்பத்தில் பிறந்து சீரும்சிறப்பாய்
திருமணம் கொண்டு நேர்கோட்டில் சென்ற
அவள் வாழ்வு மலையேற்றம் கண்டது
பல திருப்பங்களுடன்


மணவாழ்வில் பெற்ற பெண்பிள்ளை
பசிதீர்ந்து பக்கத்தில் உறங்கிட மறுபுறம்
தலைதிரும்பி தாய் உறங்கிய அயர்ச்சியில்
தவறுதலாக சாய்ந்ததால் மூச்சடைத்து
தவறியது அந்த சிறுதளிர் என்ற
பாட்டிக்கதை ஊரிலுண்டு .


இதுமெய்யாகுமானால் வாழ்வின்
வெறுமையிருள் சூழ்ந்த குற்றவுணர்வாலான முட்புதர்காட்டினில் கண்கட்டி விடப்பட்டிருப்பாள்.
கிராமங்கள் எவ்வளவுக்களவு அக்கறைகள்
நிறைந்ததோ அவ்வளவு பாசாங்கு
நிறைந்தது,ஆறுதல்களால் அமைதியும் தரும்;
புறணிகளால் அருவருப்பையும் தரும் .

இளமையில் மோட்டார்வண்டியில் நான்போக,
எண்பதிலும் எந்த ஊருக்கும் எந்தநேரத்திலும் நடந்துசென்ற உன்னை பார்க்கும்போதெல்லாம்
இயந்திரத்தில் ஒட்டிக்கொண்ட அட்டைபூச்சியாய்
என்னை உணரச்செய்வாய்; எல்லா வாகனங்களும்
நிச்சயம் உனக்கு அற்பமானதாய் தோன்றியிருக்கும்

வீதிக்கு உழைத்தாய், வீதியுடன் புறணி பேசினாய்,
வீதியில் கொண்டாடினாய்,வீதியை திட்டிதீர்த்தாய்,
வீதியுடன் சண்டையிட்டாய், வாழ்வின் இறுதியில்
வயிற்றுபோக்கால் அவதிப்பட்ட போது என்
நெஞ்சுவெடிக்க பிறந்தமேனியாய்
நடுவீதியை தழுவி கிடந்தாய்
இந்த வீதியை உன் விதியாக்கி கொண்டாய் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹைக்கூ வரிசை -3

சொல்லா காதல்