திருவண்ணாமலை கிரிவலம் -1
மே 5
இன்று சித்ரா பௌர்ணமிக்கு திருவண்ணாமலை கிரிவலம் செல்லலாம் என்று முடிவு எடுத்தேன். நான் சுற்றுலா செல்பவன் அல்ல, பயணிப்பவன். சுற்றுலா என்பது திட்டமிட்டு செல்வது, பயணம் என்பது ஒரு பகுதி மட்டுமே திட்டமிடல், பெரும் பகுதி எதிர்பாராத அனுபவங்களை சந்திக்கும் விருப்பமே மேலோங்கி இருக்கும்.
அதனாலேயே பெரும்பாலும் தனியாகவே பயணம் செய்வதுண்டு இரவு கோனேரி குப்பத்தில் ஒன்பது மணிக்கு பேருந்து பிடித்து கிளம்பி திருவண்ணாமலை செல்லும் விலக்கில் இறங்கினேன். இரவு உணவு சாப்பிடலாம் என எண்ணிய போது பேருந்து வந்து விட்டது. சிறிது பசியுடனும் தாகத்துடனும் வண்டி ஏறினேன் ஆனால் சிறிது நேரத்தில் தூங்கி தூங்கிவிட்டேன். திடீரென கண்டக்டர் இறங்குங்கள் என்று சத்தம் விட்டார் மணியை பார்த்தால் 10:50. நகரின் புறவழிச் சாலையில் இறங்கி விட்டார்கள். தூக்கம் சிறிதாக களைந்து அங்கேயே நின்றேன்.
பக்கத்திலேயே ஆவின் பாலகம் இருந்தது திருவண்ணாமலையின் நிறைய ஆவின் பாலகர்கள் உண்டு. அங்கு பால் அருந்துவது எனக்கு பிடித்த அனுபவம், அதுவும் நடுஇரவில் பால் அருந்துவது எனக்கு எப்பவுமே ருசிகரமான அனுபவம். பால் குடித்த பின்பு தெளிவு கிடைத்தது. நகரில் எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை. எல்லோரும் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்த வழியில் நானும் செல்ல தொடங்கினேன். சிறிது தூரத்தில் கிரிவலம் செல்லும் கோயிலின் பாதை தெரிந்தது.
நடு இரவில் பெருங்கூட்டம் நகர்ந்து சென்று கொண்டிருப்பதைப் பறவையின் பார்வையில் பார்த்தால் மலையை சுற்றி மிகப் பெரிய பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருப்பது போல் தோன்றும். காலணிகளை கோயிலின் அருகில் கடையில் வைத்துவிட்டு ராஜகோபுரத்தை வணங்கினேன். ஒவ்வொரு முறை ராஜகோபுரம் எனக்கு ஆற்றூர் ரவிவர்மாவின் வியந்த சொன்ன சொற்கள் ஞாபகம் வரும் "என்ன ஒரு தாளம் இந்த சிற்பங்கள் இல்லாத கோபுரத்தில்".
எனக்கு வெறுங்காலில் நடக்கும் போது தான் தோன்றியது பெரும் நடைபயணம் மேற்கொண்டு பல நாட்கள் ஆகிறது. முடியுமா? என்று ஐயம். இருந்தாலும், தனிமையில் செல்லும் பயணம் கொடுக்கும் தைரியமோ அபரிவிதம். வேகமாக கூட்டத்தில் ஒரு எறும்பாய் நடக்க ஆரம்பித்தேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக